நாற்று பாவிய வயலுக்குள் பொக்லைனை இறக்கி விவசாயியின் வயிற்றிலடிக்கும் கெயிலின் அடாவடி… கதறும் விவசாயி….

 

திருவாருர்:

டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கெயில் நிறுவனம்,  நாற்று பாவிய வயலுக்குள் பொக்லைனை இறக்கி குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாற்று பாவி சில நாட்கள் ஆன நிலையில், விவசாயியின் கண் முன்னே நாற்றை பொக்லைன் வாகனம் மூலம்  அழித்து குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் கெயில் நிறுவனத்தின் அராஜக செயல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கெயிலின் நிறுவனத்தின் அடாவடி செயலைக்கண்டு விவசாயிகள் கதறும் காட்சிகள் பெரும்சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நாகை மாவட்டத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தமிழக காவல்துறையினரின் உதவியோடு கெயில் நிறுவனம் தொடங்கி உள்ளது. மக்களின் எதிர்ப்பை மீறி பணிகள் நடைபெற்று வருகின்றன. நாகை மாவட்டம் மாதானம் முதல் மேமாத்தூரை வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதித்து எரிவாயு எடுத்துச் செல்ல கெய்ல் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இதற்காக, முடுகண்டநல்லூர் கிராமத்தில், குறுவை நடவு செய்த வயலில் குழாய் பதிப்பதற்காக பொக்லைன் இயந்திரத்தை கொண்டு சென்றுள்ளனர். முன்று போகம் விளையும் இடத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு குழாய்கள் பதிப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று மயிலாடு துறையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கெயில் நிறுவனம், அந்த பகுதியில் நெல் நாற்று பாவிய வயலுக்குள்  பொக்லைன் இயந்திரத்தை இறக்கி,  விவசாயி கண்முன்னே நாற்றை அழித்து பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகிறது. இதைக்கண்ட விவசாயி கதறி அழுதார். இதுகுறித்து அங்கிருந்த காவல்துறையினரிடம் முறையிடும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல், கெயில் நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கே பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து அழுதுகொண்ட கூறிய அந்த விவசாயி, பச்சபுள்ள மாதிரி இப்போதுதான் நாற்று நடப்பட்ட வயர் இது என்று கூறிய காட்சி காண்போரை கண்கலங்கச் செய்கிறது…

விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாப்போம் என்று  கூறி வாக்கு வேட்டையாடும், தேசிய கட்சிகளோ, மாநில கட்சிகளோ இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கிக்கொள்வது ஏனோ….

You may have missed