கஜா புயல்: இசை நிகழ்ச்சி மூலம் நிதியுதவி வழங்கும் ஏ.ஆர். ரகுமான்

--

கனடாவில் நடைபெற உள்ள தனது இசை நிகழ்ச்சிக்கு கிடைக்கும் பணத்தை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்க உள்ளதாக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் மையம் கொண்ட கஜா புயல் கடந்த வாரம் நகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதனால் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான சேதத்தையும், பாதிப்பையும் சந்தித்தன. புயல் கடந்து 6 நாட்கள் ஆகியும் இன்னும் அப்பகுதி மீளவில்லை.

raguman

ஆயிரக்கணகான மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான தென்னை மற்றும் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவும் வகையில் பலரும் கரம் கொடுத்து வருகின்றனர். தன்னார்வலர்கள், தொண்டு நிறுவங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் திரைத்துறை பிரபலங்களும் பண்ம் மற்றும் பொருளுதவிகளை வழங்கியுள்ளனர். சிவக்குமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இந்நிலையில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் புயலால் பாதித்த மக்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.

அடுத்த மாதம் கனடாவில் நடைபெற உள்ள தனது இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக வழங்க உள்ளதாக ஏ.ஆர். ரகுமான் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.