கஜா பாதித்த பகுதிகளில் மின் விநியோகம் சீராக இன்னும் ஒரு வாரம் ஆகும்: தமிழகஅரசு தகவல்

சென்னை:

ஜா புயல் பாதித்த பகுதிகளில் மின் விநியோகம் சீராக இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று  தமிழகஅரசு உயர்நிதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.

கடந்த 16ந்தேதி அதிகாலை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயல் காரணமாக மின்சார கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் கடும் சேதம் அடைந்தன.

இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும்,  நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்க வலியுறுத்தியும்  பலர் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு விசாரித்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  கஜா புயல் நிவாரணம் குறித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும் மின் விநியோகம் சீராக இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்றும் கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், புயல் பாதித்த பகுதிகளில்  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்தது.

மனுவில், கஜா புயல் பாதித்த பகுதிகளில் மின்சார விநியோகம் முழுமையாக சீரடைய இன்னும் ஒரு வார கால அவகாசம் தேவைப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும்,  பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மின் பணியாளர்களின் உதவி யோடு தமிழக மின்சார வாரியம் முழு வீச்சில் செயலாற்றி வருவதாகவும், குடிநீர் விநியோகம் 100 சதவீதம் சீரானதாகவும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு உணவு, தார்ப்பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

சீரமைப்பு பணிகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த பெரும்பாலான உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

இதனிடையே, புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தங்கள் மாவட்டத்தில் புயல் பாதித்த சில பகுதிகளில் பாதிக்கப்பட்டதற்கான புகைப்பட ஆதாரம் இல்லை எனக் கூறி நிவாரணப் பொருட்களை வழங்க மறுப்பதாக நீதிபதிகளிடம் முறையிட்டார்.

புகைப்பட ஆதாரம் இல்லை எனக் கூறி நிவாரணப் பொருட்களை தரமறுக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஒவ்வொரு வி.ஏ.ஓ. அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தி சேத விவரங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

பயிர்க்காப்பீட்டுக்கான கடைசி தேதி முடிந்துள்ள நிலையில், தமிழக அரசு மத்திய அரசிடம் கால நீட்டிப்பு கோர வேண்டும் எனவும், மத்திய அரசு அதைப் பரிசீலிக்க வேண்டும் எனவும்  நீதிபதி கள் ஆலோசனை வழங்கினர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.