‘கஜா’ புயல் பாதித்த மாவட்ட அரசு மருத்துவமனையில் ஸ்கேன் கட்டணம் ரத்து: அமைச்சர் அறிவிப்பு

நாகை:

ஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில், அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஸ்கேன் கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக சுகாதார அமைச்சர்  விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

மேலும், புயல் பாதித்த பகுதிகளில்  மருத்துவ முகாம் மூலம் 4 லட்சத்து 70ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

கடந்த 15ந்தேதி நள்ளிரவு  தொடங்கி 16ந்தேதி அதிகாலை கரையை கடந்த கஜா புயல் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. புயல் காரணமாக இதுவரை 63 பேர் பலியான நிலையில் பலர் காயடைந்தும், பெரும்பாலோர் நோய்வாய்ப்பட்டும் உள்ளனர்.

இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில், அந்த பகுதி மக்கள் பயன்பெறும் வகையில்,  சி.டி. ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்றவை களுக்கு வசூலிக்கப்பட்டு வரும்  கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள  அமைச்சர்  விஜயபாஸ்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம், திருவா ரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பல்வேறு முன் னெச்சரிக்கை, நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் சுகாதாரத் துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் சி.டி. ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் எவ் வித கட்டணமும் இன்றி எடுக்கப் படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வராத நோயாளிகளுக்கு குறைந்த பட்ச கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், புயலால் பாதிக் கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சி.டி. ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பைத் தொடர்ந்து, இதுவரை 7,196 மருத்துவ முகாம் கள் மூலம் 4 லட்சத்து 69 ஆயி ரத்து 596 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 21 லட்சத்து 35 ஆயிரத்து 572 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட் டுள்ளது.

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை கள் மூலம் 432 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 83,850 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு 2,643 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சீரமைப்பு பணிகள் முடிந்து, வழக்கம்போல பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.