கஜா பாதிப்பு வழக்கு: 62லட்சம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தமிழக அரசு தகவல்

சென்னை:

ஜா புயல் பாதிப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை மதுரை கிளையில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது. விசாரணையின்போது தமிழகஅரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் 62 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 15ந்தேதி தமிழகத்தில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி உள்ள கஜா புயல், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் உள்பட பல மாவட்டங்களை கடுமையாக தாக்கியது.

இந்த மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என வழக்கறிஞர் ரஜினிகாந்த் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள், சத்தியநாராயணன் மற்றும் சேசஷாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்று வந்த விசாரணையின்போது, கஜா புயல் நிவாரணப் பணிகளை உயர்நீதி மன்றம் கண்காணிக்கும் என அறிவித்த நீதிபதிகள்,   அனைத்து பணிகளையும் ஒரே இரவில் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என கருத்து தெரிவித்திருந்தனர்.

மேலும், புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு என்னென்ன உதவிகள், எவ்வளவு நிதி கேட்டு அனுப்பியுள்ளது. தமிழக அரசு கேட்ட நிதி மற்றும் விவரங்கள் உள்ளிட்ட ஆவணங் களை நவ.,26க்குள் தாக்கல் செய்ய வேண்டும் அதனை பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று  புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைள் குறித்தும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கஜா புயல் காரணமாக சுமார்  62.32 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

மேலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளில்  52.82 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுவிட்டது என்றும்,  மீதமுள்ள வீடுகளுக்கு மின்இணைப்புகள் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து,  கஜா புயல் பாதித்த குக்கிராமங்களுக்கும் மின்சார வசதி, கிராமங்களை இணைக்கும் பிரதான சாலைகளுக்கு போக்குவரத்து உடனடியாக செய்து தர வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.