தமிழர்களுக்காக அமெரிக்காவில் மொய்விருந்து – ரூ.3.56 லட்சம் வசூல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட மொய் விருந்தில் ரூ.3.56 லட்சம் வசூலாகி உள்ளது.

கடந்த மாதம் தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் புதுகோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்தன. லட்சக்கணகான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்த நிலையில் நிவாரணப்பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வந்தன. இன்னும் புயலின் பாதிப்பில் இருந்து பலர் மீளவில்லை.

kaja

இந்நிலையில் கஜா புயல் பாதிப்பிலிருந்து டெல்டா மக்களையும், விவசாயிகளையும் மீட்பதற்காக அமெரிக்காவில் வாகை மகளிர் தமிழ் சங்கம் சார்பில் மொய் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி வடக்கு கரோலினா பகுதியில் நடத்தப்பட்டது. அதன்படி நேற்று முன் தினம் உணவு விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட மொய் விருந்தில் தமிழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டு நன்கொடை அளித்தனர். ஒரு நாள் மொய் விருந்தில் 5,000 அமெரிக்க டாலர் வசூலிக்கப்பட்டது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 3 லட்சத்து 56 ஆறாயிரத்து 775 ரூபாய் ஆகும்.

மொய் விருந்து மூலம் கிடைத்த தொகையைக் கொண்டு முதற்கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம், எல்.என்.புரம், மாங்காடு, கொத்தமங்கலம், செரியலுார், வடகாடு உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் சூரிய ஒளியில் இயங்கும் தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.