கஜா புயல்…கடந்தாகவேண்டிய பாதைகள் ஏராளம்

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

2011ல் கடலூர் மாவட்டத்தை புரட்டிப்போட்ட தானே புயலைவிட பல மடங்கு  அதிகமாகவேத்தான் கோரத்தாண்டவம் ஆடியிருக்கிறது கஜா புயல். நாகை, தஞ்சை, திருவாரூர் தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை தரை மட்டமாக்கி மக்களின் வாழ்வாதாரங்களை ஒட்டுமொத்தமாகவே நிர்மூலமாக்கிவிட்டுள்ளது..

ஆரம்பத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் புயலை எடப்பாடி தலைமையிலான அரசு எதிர்கொண்ட விதத்தை பிரதான எதிர்க்கட்சியான திமுக உட்பட அனைத்துகட்சிகளும் பல்வேறு தரப்பினரும் பாராட்டினார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் கண்டிராத புதுமை இது.

இருந்தபோதிலும் புயல் தாக்கி முடிந்ததும் நிவாரணப்பணிகள் தொடர்பான சர்ச்சைகள் வழக்கம்போலவே தீவிரமாய் வெடித்துள்ளன. அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள் சீறுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் அமைச்சர்கள், அடிப்படை வசதிகள் கிடைக்காமல் வெறுத்துப்போய் ஆவேசமாக உள்ள மக்களுக்கு, பதில் சொல்லமுடியமால் கேள்விக்கணைகள் துளைக்கப்படுகிறார்கள்.

மக்களின் கொந்தளிப்பு தணியட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடியின் நேரடிஆய்வு அதே இதோ என பல நாட்கள் தள்ளிப்போடப்பட்டு, நேற்று (நவ 20) தரைவழி மார்க்கம் கைவிடப்பட்டு ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிடுவதாக துவங்கியது.

அதுவும் வானிலை காரணமாக முழுமை பெறவில்லை. ஓரிரு இடங்களில் தரையிறங்கி மக்களை சந்தித்து நிவாரண உதவிகள் அளித்துவிட்டு, வேறொரு நாளில்வந்து மிச்ச இடங்களை பார்வையிடுவதாகச்சொல்லி பறந்தே விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

பொதுவாக இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள சரியான திட்டமிடல் இருந்தால் படிப்படியாக பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டே போகலாம். அரசாங்க மட்டத்தில் வழிகாட்டுதலுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஒருபக்கம்.. செயலாக்கத்திற்கு துடிதுடிப்பானவர்கள் இன்னொரு பக்கம்.. என இரு தரப்பு கை கோர்த்தால் போதும்

இயற்கை சீற்றம் என்றாலே முதலில் முன்னுரிமை கொடுத்து செய்யவேண்டியது மனித உயிர்களை காக்கும் நடவடிக்கைக்குத்தான்.. புயல் விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம்.

பாதுகாப்பில்லாத இடங்களில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது இதில் முதற்கட்டம்.. புயல் தாக்கும்வரை அதற்கான நேரடி அறிகுறிகள் உடனே தெரியாது என்பதால், ‘’அப்படி பெரியதாக நடந்துவிடப்போகிறது வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’’ என்ற அலட்சிய மனோபாவம் மக்களிடம் கண்டிப்பாக மேலோங்கியிருக்கும்

அதனால் இம்மாதிரி மக்களிடம் நிலைமையின் தீவிரத்தை சொல்லி முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு தங்கவைக்கவேண்டும். அதைவிட முக்கியமான விஷயம் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும்.

இயற்கையின் தாக்குல் முடிந்ததும் பாதிக்கப்பட்ட பகுதி முழுவதிலும் உள்ள அனைத்து மக்களுக்குமே முதல் தேவை சுத்தமான குடிநீர், பால், உணவு, மருத்துவம் மற்றும் கழிப்பிட வசதிகள்

ஒரே நாளில் எல்லாமே சரியாகிவிட சாத்தியம் இல்லை என்பதால், இரவுப்பொழுதை கழிக்க, ஜெனரேட்டர்கள், மின்விளக்குகள், மெழுகுவர்த்தி, டார்ச் லைட்டுகள், கொசுவர்த்தி சுருள்கள், போர்வைகள். இதில் அரசாங்கமும் தனியாரும் சேர்ந்து பங்களிப்பை முழு வீச்சில் செய்தால் பிரச்சினைகள் சுலபத்தில் தீரும்….

சீரமைப்புபணியில் முதலில் செய்யவேண்டியது மின்சாரம். அதை எவ்வளவுக்கு எவ்வளவு துரிதமாக முடிக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வேகத்தில் குடிநீர் விநியோகம் தொடங்கி மற்றொரு முக்கிய பிரச்சினை தீரும்.

அடுத்து பிரதான சாலைகளை சீரமைத்தல். இவை முழுக்க முழுக்க அரசாங்கப்பணி. சாலைகள் சீரானால் போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெறும். அங்காங்கே கிடக்கும் புயல் சேதக்கழிவுகளை அகற்றி கொண்டுசெல்ல வழிகிடைக்கும். டெல்டா மாவட்டங்களில் மரங்கள் அதிகம் சாய்ந்துள்ளதால், கட்டர்கள் மற்றும் மரக்கழிவுகளை ஏற்றிச்செல்ல வாகனங்கள், பணியாளர் பெரிய அளவில் தேவைப்படும்

அடுத்து நிவாரண பணி, இதில் முதன்மையானது பாதிப்பு நிகழ்ந்த அடுத்த சில மணிநேரங்களில் துவங்க வேண்டிய, முக்கிய அம்சமான உடனடி நிவாரணம். அதாவது எல்லாவற்றையும் இழந்து நிராதரவாக நிற்கும் மக்களுக்கு, அரசின் ஆரம்பகட்ட ரொக்கப்பண உதவி மற்றும் அரிசி, மளிகை மண்ணெண்ணெய் உள்ளிட்டவை. இதுவும் அரசின் பணியே..

பல்வேறு துறைகளை கொண்ட ஒரு மாவட்ட நிர்வாகம், கோட்டம், வட்டம், ஒன்றியம், ஊராட்சி என தேவைகளை வகுத்து திட்டமிட்டு செயல்பட்டால் இது பெரிய பிரச்சினையே அல்ல

அடுத்து, பாதிப்பு  விவரங்களை திரட்டி சேதாரங்களுக்கு ஏற்ப மொத்தமாய் இழப்பீடு வழங்குதல். இது முழுக்க முழுக்க அரசின் பணியே.  மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தவேண்டிய பெரிய விஷயம் என்பதால் போதிய அவகாசம் நிச்சயம் தேவைப்படும்

இயற்கை பேரழிவு சந்தித்த பகுதிகளில் இன்னொரு முக்கிய கட்டம், அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரங்களை புதுப்பித்து தருதல்..

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் முழுமையான விவசாய பூமி என்பதால் பயிர்களோடு, தென்னை, வாழை மரங்கள் மட்டுமின்றி ஏராளமானோரின் சொத்து கால்நடைகளாகத்தான் இருக்கும்..

ஆகையால் கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் போன்றவற்றை பெரிய அளவில் அரசாங்கம் கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கலாம்..கறவை மாடுகளால் பால் உற்பத்தி, ஆடு, கோழிகளால் இறைச்சி உற்ப்த்திக்கு வழி பிறந்து தனி நபர் பொருளாதார நெருக்கடி ஓரளவுக்கு குறையும்..

அடுத்து, சிறு குறு தொழில்கள், சிறு வர்த்தகர்கள் நிலையை மீட்டெடுப்பது.  ஒருவருக்கொருவர் உதவ முடியாமல் எல்லோருமே பாதிக்கப்பட்டுள்ளதால், விதிகளை தளர்த்தி போர்க்கால அடிப்படையில் இவர்களுக்கு வங்கிகள் மூலம் கடனை வழங்கி கைகொடுக்கலாம்.. இது முழுக்க முழுக்க அரசு பணி.

இதற்கப்புறம் தனி நபர் பாதிப்புகள். அதாவது வருவாயை தந்துகொண்டிருந்த மூலதனத்தையே இழந்தவர்கள், உதாரணத்திற்கு டீக்கடைக்காரர் என்றால் பைலர், ஸ்டவ் போன்றவை, பெட்டிக்கடை என்றால் பாட்டில்கள், ரேக்குகள்.. சலவைத்தொழிலாளி என்றால் அவர் சார்ந்த பொருட்கள்..

இதேபோல ஆட்டோ, தள்ளுவண்டிகள் என பலரின் மூலதனங்களை அவர்களுக்கு மீண்டும் கிடைக்கச் செய்யவேண்டும். இந்த விஷயத்தில் தனி நபர்கள், குழுக்கள், பல்வேறு அமைப்புகள் ஆகியவை, உண்மையிலே பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு  உதவிசெய்யலாம்.

மாணவ, மாணவியரின் கல்விக்கட்டணங்களை பெரிய நிறுவனங்கள், தொண்டுள்ளம் படைத்தோர் தங்கள் பொருளாதா ர நிலைமைக்கு தக்கபடி ஏற்றுக்கொள்ளலாம். பள்ளி வகுப்பறைகள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றை புணரமைத்தல் பணியையும் ஏற்க இவர்களே முன்வரலாம்.

புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்து உடனே வழங்கிவிடும். ஆனால் அரசு நிதி அளித்தாலும் போதுமானதாக இல்லாமல் தீவிர உடல் பாதிப்புக்கு ஆளாகி தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெறவேண்டியர்களுக்கு உதவும் பணி மிகவும் அவசியமானது.

அதேபோல புயல் தாக்கத்தால் மன அளவில் பாதிக்கப்பட்டுள்ள தரப்புக்கு உளவியல் ரீதியான ஆலோசனையும் தேவை..குறிப்பாக புயலை பார்த்தும் அதன் பாதிப்புகளை பார்த்தும் நடுங்கிப்போயிருக்கும் சிறுவர் சிறுமியர்க்கு.. அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் இது தொடர்பாக உளவியல் நிபுணர்களை கொண்டு சிறப்பு வகுப்பு நடத்தவேண்டும்

இவ்வளவுக்கு பிறகும் எங்கிருந்தோ விதவிதமான வடிவங்களில் உதவிக்கரங்கள் கேட்டுகுரல் வந்துகொண்டேதானிருக்கும். மொத்தமாக பிரச்சினை அடங்கி சகஜ நிலை திரும்பும்வரை இதுபோன்ற உதவி கேட்கும் குரல்களை ஒதுக்கிவிடமுடியாது..ஒதுக்கவும் கூடாது.  உதவும் சக்தி படைத்தவர்கள் அதை ஆராய்ந்து பார்த்து தீர்த்துவைக்க மனமிரங்கினால் எல்லாமே ஓவர்.  ஊர்கூடி தேர் இழுக்கும் கதைதான் இது..

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Gaja cyclone.. Roads ahead to be crossed, கஜா புயல்...கடந்தாகவேண்டிய பாதைகள் ஏராளம்
-=-