கஜா புயல்: கண்காணிப்பில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள்

--

மதுரை:

மிழகத்தில் நாளை பிற்பகல் கடலூர் பாம்பன் இடையே கஜா புயல் கடக்கும் என்று வானிலை மையங்கள் அறிவித்துள்ள நிலையில்,  கடற்பரப்பில் 2 ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு இருப்பதாக ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்து உள்ளார்.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களில், கடற்கரை பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

புயல் காரணமாக சூறாவளி காற்று மற்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளதால்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை ஆய்வு மேற்கொண்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்,  கஜா புயலை சந்திக்கும் வகையில்  இந்திய கடலோர காவல் படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், கடலோர காவல்படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் கடற்பகுதியை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள என்றும், காற்றின் வேகத்தை பொறுத்து பாம்பன் பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதிக்கலாமா என்பது குறித்து  முடிவு செய்யப்படும் என்றும் கூறி உள்ளார்.