கஜா புயல் பாதிப்பு: பலியானோர் எண்ணிக்கை 49ஆக உயர்வு

நாகை:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று அதிகாலை கரையை கடந்த கஜா புயல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்தது. வேதாரண்யத்தை சூறையாடி கஜா புயல், அருகிலுள்ள தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் போன்ற மாவட்டங்களையும் சூறையாடி சென்றுள்ளது.

சுமார் 120 கி.மீ வேகத்தில் சூறாவளி மற்றும் கனமழையுடன் கரையை கடந்த கஜா புயல் காரணமாக 29,500 மின் கம்பங்கள் சேதமடைந்து உள்ளதாக தமிழக மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது.

கஜா புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு  தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வந்தது, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியும், இரவில் மின் விநியோகம் மற்றும் போக்குவரத்தையும் தடை செய்து நடவடிககை எடுத்திருந்தது.

இந்த நிலையிலும் கஜா புயல் காரணமாக பலர் மரணத்தை தழுவியுள்ளனர். புயல்-மழை காரண மாக வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் சாய்ந்தும் தமிழகம் முழுவதும் 49 பேர் பலியாகி உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 பேர் உயிரிழந்து இருப்பதாகவும்,  புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலா 7 பேரும், கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் தலா 2 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்து இருக்கிறார்கள். மேலும் பலர் காயம் அடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கஜா புயல் காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்து உள்ளது. மேலும் மின்சார இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளது.  மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.   நிறைய இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.