‘கஜா’ புயல்: திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரண நிதி முதல்வரிடம் ஒப்படைப்பு

சென்னை:

ஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக திமுக ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், இன்று தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடியிடம் திமுக பொருளாளர் துரைமுருகன் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களை சின்னப்பின்னமாக்கி சென்றுள்ள கஜா புயல் டெல்டா மாவட்டங்களில்  வரலாறு காணாத சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. கஜா புயல் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்திருந்தார்.

மேலும்,  சட்டப்பேரவை திமுக உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று தலைமை செயலகம் வந்த திமுக பொருளாளர் துரைமுருகன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து திமுக சார்பில் ரூ.1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அப்போது தி.மு.க எம்.எல்.ஏ சேகர்பாபுவும் உடன் இருந்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், புயல் நிவாரண பணிகளில் திமுக அரசியல் செய்யவில்லை என்றும், அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்  என்றார்.

மத்திய அரசிடம் கேட்கின்ற விதத்தில் அதிகாரமுடன், தைரியமாக கேட்டால் தான் கேட்ட நிதியை பெற முடியும் என்றும் தமிழகஅரசுக்கு துரைமுருகன் ஆலோசனை தெரிவித்தார்.