‘கஜா’ புயல்: திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி அறிவிப்பு

சென்னை:

ஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக திமுக ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்து உள்ளது. மேலும், திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்களின் ஒரு மாத சம்பளமும் வழங்கப்படும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களை சின்னப்பின்னமாக்கி சென்றுள்ள கஜா புயல் வரலாறு காணாத சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.

கஜா புயல் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும், திமுகவினர் தாங்கள் கொடுக்க விரும்பும் நிவாரண பொருட்களை திருச்சியில் உள்ள  கலைஞர் அறிவாலயத்துக்கு அனுப்பி வைக்கவும்,  திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபடவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், ‘கஜா’ புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்குவதாக  திமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘கஜா’ புயல் மற்றும் கனமழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, விவசாயிகள், மீனவர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பெருந்துயரத்திற்கும், மிகக் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.

புயலும் மழையும் பொதுமக்களின் வாழ்க்கை நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. வரலாறு காணாத சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்கத் தேவையான நிவாரணம், மறு சீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உதவிடும் வகையில், திமுக அறக்கட்டளையிலிருந்து ஒரு கோடி ரூபாயும், சட்டப்பேரவை திமுக உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும்”

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.