‘கஜா’ புயல்: ‘மக்கள் வெளியே வரவேண்டாம்….!’ ரமணன் வேண்டுகோள்

--

சென்னை:

மிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் இன்று இரவு 11.30 மணி அளவில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ள நிலையில், புயல் கரையை கடக்கும்போது மக்கள் யாரும்  வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று  சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குனர் ரமணன்  கூறி உள்ளார்.

வங்கக்கடலில் உருவாகி உள்ள கஜா புயல்  இன்று இரவு கரையை கடக்கும் என்றும், அப்போது 90 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களான கடலூர், நாகை, வேதாரண்யம், ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றில் பேசிய சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குனர் ரமணன், புயல் கரையை கடப்பது குறித்த செயற்கை கோள் மற்றும் ரேடார் கணிப்பின்படி தொடர்ந்து எங்கு கஜா புயல் கடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும்,  கஜா புயலால் காற்றின் வேகம் போகப் போக அதிகரிக்கும், கன மழை கண்டிப்பாக இருக்க வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறியிருந்தார்.

மேலும்,  இதற்கு முன்  தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய வர்தா, தானே  புயலை விட இது குறைவு தான். இது ஒரு புயல் அவ்வளவு தான். இருப்பினும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது எப்போதும் அவசியம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், இன்று இரவு புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதால்,  மக்கள் யாரும்  வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், கான்கிரீட் வீடுகளில் தங்குவது நலம் என்றும்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பலமான காற்று வீசுவதன் காரணமாக மரங்கள், மின் கம்பங்கள்  சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், புயல் கடந்த பின்னரும் அதன் தாக்கம் தொடரும் என்பதால்  மக்கள் மிக எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றும் தெரிவித்து உள்ளார்.