யானைப் பசிக்கு சோளப்பொறி: கஜா புயல் நிவாரணமாக ரூ. 1146 கோடி ஒதுக்கியது மோடி அரசு!

டில்லி:

மிழகத்தில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ள கஜா புயல் நிவாரணமாக ரூ.15ஆயிரம் கோடி ரூபாய் தமிழகம் கேட்டிருந்த நிலையில்,  தமிழகத்துக்கு 1,146 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இது யானைப்பசிக்கு சோளப்பொறி போல இருப்பதாக தமிழகஅரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

மத்தியஅரசின் இந்த குறைவான நிதி ஒதுக்கீடு இது தமிழக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கடந்த நவம்பர் 15ந்தேதி தமிழகத்தை சூறையாடிச் சென்ற கஜா புயலுக்கு 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டங்கள் வரலாறு காணாத சேதத்தை சந்தித்துள்ளன. இதைத் தொடர்ந்து கஜா புயல் நிவாரணமாக தமிழக அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி சந்தித்து முறையிட்டார். அப்போது முதல்கட்டமாக ரூ.1500கோடி ஒதுக்குமாறு கோரியிருந்தார்.

ஆனால், மத்தியஅரசு முதல்கட்டமாக  ரூ.353.70 கோடி ரூபாய் நிவாரணமாக நிதியாக ஒதுக்கியது. அதைத் தொடர்ந்து, ஆய்வு செய்த மத்திய அரசு அதிகாரிகளின் அறிக்கையை தொடர்ந்து, மேலும் 1,146 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்து உள்ளது.

இன்று டில்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் கூட்டம்  நடைபெற்றது. அதில், தமிழகத்துக்கு 1,146 கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பதாக  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிதி மத்திய பேரிடர் நிவாரண நிதி தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானைப்பசிக்கு சோளப்பொறி என்பதுபோல உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.