மீண்டும் வேகமெடுக்கும் ‘கஜா’ புயல்!

சென்னை:

மிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் வேகம் குறைந்து வலுவிழந்து வருவதாக இன்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் அதன் வேகம் மீண்டும் அதிகரித்து வருவதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலை 5 கிலோ மீட்டர் வேகத்தில் வருவதாக கணிக்கப்பட்ட புயல் தற்போது மணிக்கு 12 கிமீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவான புயலுக்கு  ‘கஜா’ என பெயரிடப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் கஜா புயல், கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. பின்னர் புயல் திசை மாறியதாக கூறப்பட்டது. இதன் காரணமாக கடலூருக்கும் – பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து வட கிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜாவின் வேகம் மணிக்கு 4 கிமீ என குறைந்ததாக இன்று காலை வானிலை மையம்  தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் வானிலை மையம் தெரிவித்துள்ள தகவலில்,  கஜா புயல் சென்னையில் இருந்து 690  கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 790 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாகவும், தற்போது புயலின் வேகம் அதிகரித்து வருவதாகவும்,  மணிக்கு 12 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசைநோக்கி நகரத் தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புயல் புயல் பாம்பன்- கடலூர் இடையே நவம்பர் 15-ம் தேதி பிற்பகல் கரைகடக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை , ராமநாத புரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் என்றும்,  கஜா புயலால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அணைகளை கண்காணிக்க வேண்டும் என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோருக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.