கஜா புயல் பாதிப்பு: சேதமடைந்த மரங்களை அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

நாகை:

ஜா புயல் பாதிப்பால்  சேதமடைந்த சவுக்கு மரங்கள் உள்பட மரங்களை அரசே கொள்முதல் செய்து அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கஜா புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை மரங்கள், பல ஆயிரம் ஏக்கர் சவுக்கு மரங்கள் மற்றும் பல வகையான மரங்கள், பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமாகி உள்ளது. இதுகுறித்து அரசு கணக்கெடுப்பு நடத்தி வருகிறது

இந்த நிலையில், புயல் பாதிப்புக்குள்ளா மரங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில்  கஜா புயல் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான ஏக்கர்  சவுக்கு மரங்கள் சரிந்து விழுந்து விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரங்களையும் அரசே  கொள்முதல் செய்து, அதற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், கருப்பும்புலம், ஆயக்காரன்புலம், குரவப்புலம், தேத்தாக்குடி, கத்தரிப்புலம் உள்பட பல பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சவுக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவைகள் தற்போது புயலானால் சரிந்து விழுந்துள்ளது.

இதை அரசே காகித நிறுவனம் மற்றும் அனல் மின் நிலையங்களுக்காக கொள்முதல் செய்து, , உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு தரப்பில் தனியார் வியாபாரிகளை கொண்டு மரங்கள் வெட்டப்பட்டு அதற்கான நிவாரணம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.