கஜா புயல் நிவாரணம்: தென்னங்கன்றுகளை நட்ட சீமான் வெட்ட வெளியில் பொதுமக்களோடு உணவு உண்டார்

ஜா பாதித்த பகுதிகளில் தென்னங்கன்றுகளை நட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாதிக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து சாப்பிட்டார்.

நாம் தமிழர் கட்சியின் சுற்று சூழல் பாசறை சார்பாக “புயலும் புனரமைப்பும்” என்ற நிகழ்வு கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது.  இதன் ஒரு பகுதியாக ஆலந்தன்குடிகாடு, கன்னுக்குடி பகுதிகளில்  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்னை மரகன்றுகள் நட்டார்.

மேலும் 50000 மரக்கன்றுகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.

புயல் பாதித்து பல நாட்களாகியும் இன்னமும் பல இடங்களில் மக்கள் உணவுக்கு தவித்தவண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில், திருச்சிற்றம்பலம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சீமான்,  மனம் தளர்ந்து போயிருக்கும் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில்  உரையாற்றினார். அவரது ஊக்கமளிக்கும்   பேச்சிற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

கூட்டம் முடிந்தபிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம், நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  மில் வளாகம் ஒன்றில் நடந்த இந்த அன்னதான நிகழ்ச்சியில் சுமார் 3000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். எல்லோருக்கும் வாழை இலை போடப்பட்டு சாப்பாடு பரிமாறப்பட்டது.

அப்போது சீமானும் சாப்பிட வந்தார். அவருக்கு தனியாக இடம் ஒதுக்கி அங்கே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அமரச் சொன்னார்கள். ஆனால் சீமான் அதை மறுத்து, மக்களுடனே உட்கார்ந்து சாப்பிடுகிறேன் என்றார். வரிசையாக உட்கார்ந்திருந்த பொதுமக்களுடன் சேர்ந்து தரையில் உட்கார்ந்துகொண்டார். பிறகு அவருக்கும் அங்கேயே சாப்பாடு பரிமாறப்பட்டது. தற்போது சீமான் பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.