குடியரசு தினத்தில் வீரதீர சேவை விருதுகள் – விபரங்கள் வெளியீடு!

--

புதுடெல்லி: குடியரசு தினத்தையொட்டி, காவல்துறையைச் சேர்ந்த மொத்தம் 1040 பேருக்கு வீரதீர சேவை விருதுகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில், வீரதிர செயலுக்கான விருதை 286 பேரும், வீரதீர செயலுக்கான ஜனாதிபதியின் போலீஸ் பதக்கத்தை 4 பேரும், சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கத்தை 93 பேரும், சிறப்பான சேவைக்கான போலீஸ் பதக்கத்தை 657 பேரும் பெறுகின்றனர்.

மேலும், வீரதீர செயலுக்கான ஜனாதிபதியின் போலீஸ் பதக்கங்கள், இந்தாண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் அம்மாநில காவல்துறையினர் பெரும்பாலானோருக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, மேற்கண்ட விருதுகளுக்கு, பீகார், சத்தீஷ்கர், டெல்லி, ஜார்க்கண்ட், மராட்டியம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

இத்தகைய விருதுகள் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய சிறப்பு நாட்களில் வழங்கப்படுகின்றன.