புதுடெல்லி: ஒரு கேப்டனாக விராத் கோலி, இத்தருணத்தில் எதையும் வென்றிருக்கவில்லை; எனவே, கேப்டன் என்ற முறையில் சாதிப்பதற்கு, கோலிக்கு நிறைய விஷயங்கள் பாக்கியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர்.

வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரம் பிரையன் லாரா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நட்சத்திரம் காலிஸ் ஆகியோருடன் அவர் இந்த விஷயத்தில் விராத் கோலியை ஒப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “கிரிக்கெட் என்பது ஒரு அணியாக விளையாடுவதாகும். உங்களின் தனிப்பட்ட சாதனையாக நீங்கள் நிறைய ரன்களைக் குவிக்கலாம். பிரையன் லாரா மற்றும் காலிஸ் போன்றவர்கள் அதிக ரன்களைக் குவித்துள்ளார்கள். ஆனால், ஒரு அணியாக அவர்கள் எதையும் சாதிக்கவில்லை.

எனவே, விராத்கோலியும் ஒரு தலைவராக எதையும் சாதிக்கவில்லை. அவருக்கு அந்த  நிலையில் சாதிப்பதற்கு நிறைய உள்ளது. நீங்கள் பெரிய ரன்களை அடிக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை, பெரிய கோப்பைகளை வெல்லும்வரை, உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கைப் பூர்த்தியடையாது” என்றார் கம்பீர்.

2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடனும், 2019 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடனும், கோலியின் தலைமையிலான இந்திய அணி தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.