புதுடெல்லி: இந்த 2019 கிரிக்கெட் உலகக்கோப்பையை பெறுவதற்கான வாய்ப்பில், ஆஸ்திரேலிய அணியே முதலிடம் வகிப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர்.

உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்புள்ள அணி குறித்து கெளதம் கம்பீரிடம் கேட்கப்பட்டதற்கு, அவர் எந்த தயக்கமும் இல்லாமல் முதலில் சொன்னது ஆஸ்திரேலிய அணியைத்தான்.

இந்தியாவில் ஒருநாள் தொடரில் ஆடுவதற்கு முன்னர், அந்த அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஆனால், இந்திய மண்ணில் யாரும் எதிர்பாராத வகையில், கோலியின் அணியை 2-3 என்ற கணக்கில் வீழ்த்தி, கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றது.

பின்னர், பாகிஸ்தானை ஒருநாள் தொடரில் 5 – 0 என்று வெள்ளையடித்தது. மேலும், தடைசெய்யப்பட்டிருந்த ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் அந்த அணிக்கு திரும்பியருப்பது கூடுதல் பலம்.

இந்நிலையில்தான் கம்பீர் தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவுடன் இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்புள்ள அணிகளாக இரண்டை கணித்துள்ளார்.

ஒன்று இந்தியா, மற்றொன்று இங்கிலாந்து. இந்திய அணியைப் பொறுத்தவரை, விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரையும் பெரிதும் நம்பியிருப்பதாக கூறியுள்ள அவர், பந்துவீச்சில் பும்ராவின் பங்களிப்பு மிக முக்கியம் என்றும் கூறியுள்ளார்.