கோவை:

பாதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கணபதி, ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பதவி நீக்கம் செய்து ஆளுநர் பன்வாரிலால் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

இதைத்தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற பல்கலைக்காக செனட் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலையின் சிறப்பு ஆட்சி மன்ற குழுக்கூட்டம் தமிழக உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பல்கலைக்கழகத்தை  நிர்வகிக்க உயர்கல்விதுறை செயலர் சுனில் பாலிவால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த குழுவில் பேராசிரியர்கள் திருநாவுக்கரசு, ஜெயக்குமார் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுனில் பாலிவால், பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தர் நியமிக்கப்படும் வரை இந்த குழு செயல்படும் என்றும், குழுவிற்கு  துணைவேந்தருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், துணைவேந்தர் நியமனத்திற்கான விதிகள் கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது என்றவர், தகுதி அடிப்படையில் தான் துணை வேந்தர் நியமிக்கப்படுகின்றனர் என்றும் கூறினார். தமிழகத்தில் துணை வேந்தர் ஒருவர் கைது செய்யப்படுவது இது முதல்முறை என்றும், கணபதியின்  கைது குறித்து, சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் அவர் கூறினார்.