காந்தியும், கோட்சேவும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது: பிரஷாந்த் கிஷோர் கருத்து

பாட்னா: காந்தியும் கோட்சேவும் ஒரே பாதையில் ஒன்றாக பயணிக்க முடியாது என்று பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கூறி இருக்கிறார்.

பீகாரை சேர்ந்த பிரஷாந்த் கிஷோர், முக்கிய அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் அமைப்பை நடத்துகிறார். பீகாரின், ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சியில் சேர்ந்த அவர், அக்கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பிரசாந்த் பேசியதால், கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் பாட்னா வந்த பிரஷாந்த் கிஷோர், பாட் பீஹார் கி என்ற திட்டத்தை துவக்கினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: இந்த திட்டத்தின் மூலம், பீகார், இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் 10 மாநிலங்களில் ஒன்றாக இருக்கும்.

கட்சியின் கொள்கை குறித்து பல முறை எனக்கும், நிதிஷூக்கும் இடையே விவாதம் நடந்துள்ளது. அப்போது, காந்தியின்கொள்கையில் இருந்து கட்சி எப்போதும் தடம்மாறாது என நிதிஷ் சொல்வார்.

ஆனால், காந்தியை கொன்றவர் மீது மென்மையான போக்கை கடைபிடிக்கும் நபர்களுடன், அவரது கட்சி கூட்டணி வைத்துள்ளது. என்னை பொறுத்தவரை, காந்தியும் கோட்சேவும் ஒரே பாதையில், ஒன்றாக பயணிக்க முடியாது.

பா.ஜ., – நிதிஷ் கொள்கை ஒத்து போகாது. கொள்கையை அக்கட்சியுடன், அவர் சமரசம் செய்துள்ளார். நிதிஷ்க்கு பா.ஜ., கூட்டணி தேவையில்லை. கூட்டணி அமைத்த பின்னர் அவர் மாறிவிட்டார். இக்கூட்டணியால் மாநிலம் வளர்ச்சி பெறவில்லை.

பல்வேறு அரசியல் கட்சிகளுடனான எனது தொடர்பு நன்கு அறியப் பட்டதாகும். நான் அதை ஒருபோதும் ரகசியமாக வைத்திருக்கவில்லை. ஆனால் நான் வேறு ஏதேனும் ஒரு கட்சியின் முகவராக ஜேடியுவில் சேரவில்லை.

ஒரு பொய்யைப் பேசுவது நிதீஷ்குமாருக்கு விஷயங்களை எளிதாக்குகிறது என்றால், அதை எனது தந்தை போன்ற அவருக்கு விட்டு கொடுப்பதாக நினைக்கிறேன்.

பீகாரை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. அதற்கு காரணம் என்ன? 2005 ல் மாநிலம் எப்படி இருந்ததோ, இன்றும் அப்படித்தான் உள்ளது. இந்தியாவில் ஜார்க்கண்டிற்கு அடுத்து, பீகார் இன்னும் பின்தங்கிய மாநிலமாக தான் உள்ளது.

2005 ல் பீகார் பின்தங்கிய மாநிலமாக உள்ளதாக தெரிவித்தேன். தற்போது  நல்ல தலைமை தேவைப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது என்றார்.