மதுரை:

நாளை மகாத்மா காந்தியின் நினைவுநாளை யொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என அரசுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

வழக்கமாக காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால், நினைவு தினத்துக்கு இதுவரை விடுமுறை விடப்பட்டது இல்லை. இந்த நிலையில், காந்தி நினைவு தினத்தன்றும் டாஸ்மாக் கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியிருப்புக்கு மத்தியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டிருப்பதை அகற்றக்கோரி அந்த பகுதியை சேர்ந்த  ரசீத் என்பவர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் எதிர்மனுதாரராக மதுவிலக்கு ஆயப்பிரிவு உள்துறை செயலாளரை சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து, குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க வேண்டும்  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து,   மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி நாளை (30-ந்தேதி)  தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என அரசு அதிரடி உத்தரவு பிறப்பின்ர்.

இதுகுறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கூறி வழக்கை பிப்ரவரி 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.