மான்செஸ்டர்

பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில் 9 அடி உயரமுள்ள மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் ஆட்சியை எதிர்த்து அகிம்சை முறையில் போரிட்ட மகாத்மா காந்தியின் சிலை பிரிட்டனில் ஏற்கனவே ஆறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.   பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகர் கடந்த 2017 ஆம் வருடம் தீவிரவாத தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.   அதையொட்டி அகிம்சை முறையில் போரிட்ட மகாத்மா காந்தியின் சிலை இந்த நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டர் நகரில் உள்ள தேவாலய வாசலில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை திறப்பு விழாவில் மான்செஸ்டர் நகர மேயர் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.  சுமார் 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைகளில் அதிக உயரமுள்ள சிலை ஆகும்.

இந்த சிலை அமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஸ்ரீமத் ராஜசந்திரா மிஷன் தரம்பூர் என்னும் அமைப்பு ஆகும்.  இந்த அமைப்பைத் தொடங்கிய ராஜசந்திரா காந்தியின் சீடர்களில் ஒருவர் ஆவார்.   இந்த திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட பிரிட்டன் நாட்டுப் பிரபலங்கள் காந்தியின் சேவை மனப்பான்மையையும் அவருடைய அகிம்சை போராட்டங்களையும் பாராட்டி உள்ளனர்.

ஏற்கனவே பிரிட்டன் தலைநகர் லண்டனில் இரு இடங்களில் மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்பட்டுள்ளது.   அதில் ஒன்று தவிஸ்டாக் சதுக்கம் பகுதியில் அமர்ந்த நிலையில் உள்ளது.   மற்றொன்று நிற்கும் நிலையில் பாராளுமன்ற சதுக்கத்தில் அமைந்துள்ளது.   இந்த சிலையின் அருகே காந்திக்கு மிகவும் எதிர்ப்பு தெரிவித்து அவரை அரை நிர்வாண பக்கிரி என அழைத்த சர்ச்சிலின் சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.