குடியுரிமைச் சட்டத்தில் பாஜக கொண்டுவந்துள்ள திருத்தங்கள் மூலம் மகாத்மா காந்தி மீண்டும் சுடப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ”காஷ்மீர் மக்களுக்கு 370-வது சட்டப் பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து கொடுத்தோம். நமது அரசியல் சட்ட சாசனத்தில் சிறப்பு அந்தஸ்து கொடுப்பதாக அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தோம். ஆனால், அதை இந்த மத்திய அரசு மீறியுள்ளது. காஷ்மீர் இன்று எரிந்து கொண்டிருக்கிறது.

தற்போது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. முஸ்லிம்களையும் ஈழத் தமிழர்களையும் ஒதுக்கும் வகையில் இந்தச் சட்டம் பாரபட்சமாக இருக்கிறது. மகாத்மா காந்தியை மீண்டும் சுட்டுக் கொன்றதற்குச் சமமாக மத்திய அரசின் நடவடிக்கை இருக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் மீட்க முடியாத இடத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். ஆனால், அரசோ அதை திசைத் திருப்பத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது சரியல்ல” என்று தெரிவித்தார்.