காந்தியவாதி விஜய்!:  அப்பா  எஸ்.ஏ.சந்திரசேகர்

சென்னை:

மூக அவலங்கள் மீது விஜய்க்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் என்று அவரது தந்தை இயக்குநர் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, பணமில்லா பரிவர்த்தை குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகிறார்கள். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “சமூக அவலங்கள் மீதான விஜய்யின் கோபமே மெர்சல் படம். எம்ஜிஆர், காமராஜரை போல் விஜய்க்கு சமூக அக்கறை இருக்கிறது. அரசியல் ஆர்வம் என்பதை காட்டிலும் விஜய்க்கு சமூகத்தின் அவலங்களை ஒழிக்க வேண்டும் என்பதில் அக்கறை இருக்கிறது.

விஜய் ஒரு காந்தியவாதி. அவர் தனது கோபத்தை அவரது சினிமா மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். நடிகர் விஜய் கத்தியை எடுத்துக் கொண்டு வீதியில் நின்று போராட முடியாது. அவரது ஆயுதம் சினிமா.

மக்களுக்கு நல்லது செய்ய ஒரு போராளி, மக்களின் தலைவனாகவும் இருந்தும் நன்மை செய்யலாம். பதவிக்கு வர வேண்டும் என்கிற அவசியமில்லை.

அவர் தன்னை  நம்பியுள்ள இளைஞர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்கு அவர் தலைவனாக வேண்டும். பின்னர் மாற்றத்தை தர வேண்டும். இதை பதவியிலிருந்து கொண்டு செய்வாரா இல்லை அமைப்பின் மூலம் செய்வாரா என்பது எனக்கு தெரியாது. அரசியல் ஆர்வத்துக்கும் சமூக அக்கறைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்”  என்று  எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

You may have missed