காந்தி கொலை குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டும்! மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு

டில்லி:

‘மகாத்மா காந்தியின் மரணம் குறித்த ஆவணங்களையும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும்’ என், தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

நாட்டின் விடுதலைக்காக போராடிய, மகாத்மா காந்தி, 1948 ஜன., 30ல், இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த, நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, தற்போதும் விவாதங்கள் தற்போதும் தொடர்ந்துவரும் நிலையில், மகாத்மா காந்தி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோட்சேயின் வாக்குமூலம் உள்ளிட்ட விபரங்களை வெளியிடக் கோரி, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த, தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, ”நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி  அனைவராலும் போற்றப்படும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, பேச்சுக்கள் தொடர்பாக, பல்வேறு நுால்கள் இருக்கின்றன. இணையதளங்களில் தகவல்கள் கிடைக்கின்றன. பல்வேறு அமைப்புகள், இந்த விபரங்களை வெளியிட்டுள்ளன.

ஆனால், அரசு சார்பில், எந்தவித ஆவணங்களும் வெளியிடப்படவில்லை. தேசத்தந்தையாக போற்றப்படும், மகாத்மா காந்தியின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து, இன்றைய சந்ததியினர் அறிந்து கொள்ள உரிமை உள்ளது. மகாத்மா காந்தியின் கொலையில் உள்ள, சர்ச்சைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள, நீதிபதி ஜே.எல்.கபூர் கமிஷன் அறிக்கையும் இதை வலியுறுத்தி உள்ளது.

இதன் மீது, பிரதமர் அலுவலகம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? மகாத்மா காந்தியை கொன்ற, நாதுராம் கோட்சேயின் வாக்குமூலம் என்ன?

காந்தியின் மறைவுக்கு பின் நடந்த வழக்கு விசாரணை உள்ளிட்ட விபரங்களை வெளியிடுவதால், இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே மோதல் ஏற்படும் என்று சொல்லப்படுவதை ஏற்க முடியாது. காந்தியின் கொள்கை பிடிக்காததால், அவரை கோட்சே கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. கோட்சேயின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள, ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.

சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை போக்கும் வகையில், அரசிடம் இருந்து, நூற்றுக்கும்  மேற்பட்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அது போல, மகாத்மா காந்தியின் மரணம், வழக்கு விசாரணை, கோட்சேயின் வாக்குமூலம் உள்ளிட்ட, அனைத்து விபரங்களையும் வெளியிட வேண்டும். இந்த ஆவணங்களை, தேசிய ஆவணக் காப்பகம் தொகுத்து, தன் இணையதளத்திலும் வெளியிட வேண்டும்” என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.