ரேவா, மத்தியப்பிரதேசம்

காத்மா காந்தியின் 150 ஆம் பிறந்த நாள் அன்று அவருடைய அஸ்தி திருடப்பட்டு  புகைப்படம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபட்டவர்களில் மகாத்மா காந்தி முதன்மையானவர் ஆவார்.   இவர் தனது அகிம்சை போராட்டத்தின் மூலம் பிரிட்டிஷாரிடம் இருந்து இந்திய நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தார்.    இவரைப் பல இந்திய மக்கள் தேசப்பிதா எனப் போற்றி வருகின்றனர்.  ஆனால் பல இந்து அமைப்பினர் இவர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக  இருந்து இந்துக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

அவர்கள் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை மற்றும் அதன் பிறகு நடந்த கலவரங்களுக்குக் காந்தியே பொறுப்பு எனத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.  அவர் கோட்சே என்பவரால் 1948 ஆம் வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்,   இந்துக்களின் வழக்கப்படி அவரது அஸ்தி ஆற்றில் கரைக்கப்பட்டது.   அத்துடன் அஸ்தியில் பல பகுதிகள் நாட்டில் உள்ள பல நினைவிடங்களில் வைக்கப்பட்டது.

அவற்றில் மத்திய பிரதேச மாநிலம் ரேவா என்னும் பகுதியில் உள்ள பாபு பவன் என்னும் காந்தி நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்தது.  கடந்த 2 ஆம் தேதி காந்தியின் 150 ஆம் பிறந்த நாள் விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டது.    அதையொட்டி பாபு பவன் காலை விரைவில் திறக்கப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்தி வந்துள்ளனர்.

இந்த நினைவகக் காப்பாளர் மங்கல் தீப் திவார் இரவு 11 மணிக்கு மூட வந்தபோது காந்தியின் அஸ்தி வைத்திருந்த கலசம் காணாமல் போயிருந்ததைக் கண்டுள்ளார்.   அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியின் புகைப்படம் சேதப்படுத்தப் பட்டிருந்தது.   இதையொட்டி அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.   காவல்துறையினர் பாபு பவனில் உள்ள  கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.