பிரதமருக்கு எதிராக செயல்படும் 4 பேர் கொண்ட கும்பல் : சுப்ரமணியன் சாமி

டில்லி

பிரதமருக்கு எதிராக ஆதியா, ராகேஷ் அஸ்தானா உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் செயல் படுவதாக சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மேல் ஒருவர் லஞ்சப் புகார்களை கூறி வந்தனர். ராகேஷ் அஸ்தானா மீது ஒரு வழக்கில் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ வழக்கு பதிந்துள்ளது. இதை ஒட்டி அவர்கள் இருவரையும் விடுப்பில் செல்ல உத்தரவிட்ட மத்திய அரசு புதிய இயக்குனரை பணியில் அமர்த்தியது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி இன்று நாடெங்கும் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த் உள்ளது. பாஜகவின் மூத்த தலவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சாமி இது குறித்து தனது கருத்துக்களை நேற்று தெரிவித்துள்ளார்.

சுப்ரமணியன் சாமி, “பிரதமர் மோடிக்கு எதிராக நடக்கும் 4 பேர் கொண்ட கும்பலில் நிதிச் செயலர் ஆதியாவும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் உள்ளனர். நான் மோடிக்கு ஆதரவாக இருக்கிறேன். ஆனால் அவர்கள் மோடியின் புகழுக்கு பங்கம் விளைக்கும் வகையில் செயல்படுகின்றனர். அவர்களும் ஒரு சில மத்திய அமைச்ச்ர்களும் லஞ்ச ஊழல் செய்யும் அரசியல் வாதியான சிதம்பரத்தை காக்க முயற்சி செய்கின்றனர்.

சிதம்பரத்துக்கு உதவ முயலும் மத்திய அமைச்சர்கள் யாரென்பதை நான் விரைவில் தெரிவிக்கிறேன். நான் நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் குறித்து வழக்கு பதிவு செய்து போராடுகிறேன். ஆனால் இது போன்ற நடவடிக்கைகளால் அமைச்சர்கள் எனது முதுகில் குத்துகின்றனர். என்னால் என்ன செய்யமுடியும்?

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா ஒரு நேர்மையான மனிதர் ஆவார். அவர் லஞ்சத்தை ஒழிக்கும் பணியை செய்து வந்தார். அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுத்ததை திரும்பப் பெற வேண்டும் என நான் பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன். அஸ்தானா ஒரு ஊழல் அதிகாரி. ஆனால் அலோக் வர்மா ஒரு நேர்மையான அதிகாரி” என தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் சுப்ரமணியன் சாமி தனது டிவிட்டரில் சிபிஐ அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து கடுமையாக விமர்சித்ததும், இவ்வாறு நடந்தால் தாம் ஊழலுக்கு எதிராக பதிவு செய்துள்ள அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற நேரிடும் எனவும் பதிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.