மாறி வரும் காசி நகரும் நாறிப்போகும் கங்கை நதியும்
காசி
காசி நகரில் ஏற்படும் முன்னேற்றங்களால் கங்கை நதி மாசுபடுவது அதிகரித்துள்ளது.
இமயமலையில் இருந்து உற்பத்தி ஆகும் கங்கை நதி இந்தியாவின் பாரம்பரியம் மிக்க புனித நதிகளில் ஒன்றாகும். இது இமயமலை அடிவாரத்தில் உள்ள ஹரித்வாரில் இருந்து சமவெளியில் ஓடத் தொடங்குகிறது. நதியின் கரைகளில் உள்ள அனைத்து நகரங்களின் கழிவு நீர் உட்பட பலவற்றையும் இந்த கங்கையில் கலப்பதால் நீரே கடுமையாக மாசுபடுகிறது.
இந்துக்களின் புனித நகரான காசிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அங்கு புனித நதியாக கொண்டாடப்படும் கங்கை நதி கழிவு நீர் கலப்பால் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. கங்கை நீர் சுத்தம் செய்யும் திட்டத்தை மோடி அரசு கடந்த 2014 ஆம் வருடம் அறிவித்தது. இதற்கு நமாமி கங்கை என பெயர் இடப்பட்டது.
ஆனால் சமீபத்தில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் படி காசி நகரில் முன்பை விட கங்கை நீர் 58% அதிக மாசடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 100 மிலி நீரில் 2500 மிதவை துகள்கள் இருப்பின் அவை குளிக்கவும் லாயக்கற்ற நீர் என சுகாதார மையம் தெரிவிக்கிறது. ஆனல் தற்போதுள்ள கங்கை நீரில் அதை போல 20 மடங்கு மாசு உள்ளது.
அத்துடன் காசி நகரில் உள்ள முக்கியமான ஐந்து கழிவு நீர் நிலையங்களும் கழிவு நீரை கங்கையில் கலந்து விடுகின்றன. பல நீர் வாழ் உயிரினங்கள் இந்த நீரில் இறந்து மிதப்பதை கண் கூடாக காண முடிகிறது. காரணம் இந்த நதி கழிவு நீர் கலப்பால் ஆக்சிஜனை இழந்ததே ஆகும். நீரில் இருக்க வேண்டிய ஆக்சிஜன் அளவில் சுமார் 20% மட்டுமே காசி நகரில் ஓடும் கங்கையில் காணப்படுகிறது.
இது குறித்து காசி வாழ் மக்களில் ஒருவர், “இது பிரதமரின் தொகுதியாகும். இந்த காசி நகரில் இருந்து தான் கங்கை சுத்திகரிப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் புனிதமான கங்கை நதி மாசு அடைவது குறையவில்லை. பாவத்தை போக்க கங்கையில் நீராடும் மக்களுக்கு பாவம் குறைகிறது ஆனால் நோய் அதிகரிக்கிறது. நாளுக்கு நாள் மாறி வரும் காசி நகர் பெருமை அடைகிறது. ஆனால் நாறிப் போய் உள்ள கங்கை நதியால் நாடே சிறுமை அடைகிறது” என தெரிவித்துள்ளார்.