சென்னை:

தான் இசை அமைத்த திரைப்பாடல்களை பாடக்கூடாது என எஸ்.பி.பி. உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் இளையராஜாவை அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தனது திரையுலக பயணத்தைத் துவங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து உலகமெங்கும் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தற்போது அமெரிக்காவில் அவரது இசை நிகழ்ச்சி நடந்துவருகிறது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசையமைத்த பாடல்களை மேடை நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பி., பாடகி சித்ரா உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது குறித்து எஸ்.பி.பி., “எனக்கு சட்ட விதிகள் தெரியாது. ஆனாலும் இனி இளையராஜா இசை அமைத்த திரைப்பாடல்களை பாடமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் செயல், கடும் பரவலாக கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரன், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “இளையராஜாவின் இசையை அனைவரும் விரும்புவார்கள். அதை பாடக்கூடாது என்று சொல்வது என்ன நியாயம்? அவற்றை எல்லோரும்தான் பாடுவார்கள். நானும்தான் சாலையில் பாடுவேன். அவர் பாடலை பாடுவது சட்டமீறல் என்றால், அந்த சட்ட மீறலை திரும்பத்திரும்ப செய்வோம்” என்றார்.

மேலும் அவர்,” இளையராஜாவுக்கு வயதாகிவிட்டது. அதனால் ஒன்றும புரிவதில்லை.. ஏதேதோ பேசுகிறார்.. ஏதேதோ செய்கிறார்” என்றும் தெரிவித்தார்.