தாவூத் இப்ராஹிம்
தாவூத் இப்ராஹிம்

வாஷிங்டன்:
அமெரிக்காவில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அல்தாப் கணனிக்கு 68 மாத சிறைத் தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் அபராதம் விதித்து அந்நாட்டு ஃப்ளோரிடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் இவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ஒரு ஆண்டுக்கும் மேலாக அல்தாப் அங்கு சிறையில் தற்போது வரை அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் 13 பண மோசடி வழக்குகளில் இவருக்கு தொடர்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக அல்தாப் கணனிக்கு லஷ்கர் இ தொய்பா, தாவூத் இப்ராகிம், அல் கொய்தா, ஜெய்ஷ் இ முகமுது ஆகிய பயங்கரவாத அமைப்புகளோடு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று அமெரிக்காவின் கருவூலத் துறை தெரிவித்திருந்தது. மேலும், இந்த வழக்கில் சீனா, மெக்சிகோ, கொலும்பியாவில் உள்ள கிரிமினல் கும்பல்களுடன் அல்தாப் தொடர்பு வைத்துக் கொண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார் என்றும் கருவூலத் துறை குற்றம்சாட்டியிருந்தது.

இந்த வழக்கு விசாரணையை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள 6 சட்ட அமலாக்க முகமைகள் விசாரணை மேற்கொண்டன. அல்தாப் கணனி மற்றும் கலியா இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் பாகிஸ்தானை மையமாக கொண்டு சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் பல பில்லியன் டாலர்களை பரிமாற்றம் செய்து வருகின்றன.

இந்தியாவில் 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர். அவர் பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்பதை அந்நாடு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.