செளரவ் குங்குலியும், ஜெய்ஷாவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தவிர்க்க முடியாதவர்கள் அல்லர் என்றுள்ளார் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏகே பட்நாயக்.
மேலும், தங்களின் பதவிகாலம் முடிவடைந்தவுடன், சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புகளிலிருந்து விலக வேண்டும் என்று கருத்துக் கூறியுள்ளார் அவர்.
கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் நடைபெற்றதாக கூறப்பட்ட முறைகேடுகளை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வுக்கு தலைமையேற்றவர் இந்த ஏகே பட்நாயக். அப்போதைய முறைகேட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயரும் வலுவாக அடிபட்டதால், அந்த அணியின் உரிமையாளரும், அப்போதைய பிசிசி‍ஐ அமைப்பின் தலைவராக இருந்தவருமான இந்திய சிமெண்ட்ஸ் சீனிவாசனை பதவி விலகச் செய்தவர்.
ஒரு மனிதர், ஒரு அமைப்பினுடைய பதவியில் நீண்ட நாட்கள் இருக்கும்போது, அவர் தனக்கான ஒரு செல்வாக்கை அந்த அமைப்பில் வளர்த்துக்கொண்டு விடுகிறார். அதன்பிறகு, அந்த அமைப்பின் நம்பகத்தன்மையே சிதைந்து விடுகிறது. எனவேதான், சீனிவாசன் போன்ற வலுவான நபர்களை, பிசிசிஐ பதவியிலிருந்து விலகச் செய்ய வேண்டியிருந்தது.
பிசிசிஐ தனது பழைய விதிமுறைகளுக்குத் திரும்பக்கூடாது. அதேசமயம், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் எப்படி அணுகும் என்பதைப் பொறுத்தே, எதிர்கால நிகழ்வுகள் அமையும்” என்றுள்ளார் அவர்.
பிசிசிஐ அமைப்பின் புதிய விதிமுறையின்படி, தலைவர் மற்றும் செயலாளர் இருவரும், ஒட்டுமொத்த பதவிகாலமான 3 ஆண்டுகளில், மூன்றில் ஒரு பங்கிற்கும் சற்று குறைந்த காலத்திற்கே பதவியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.