கொல்கத்தா: இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை உறுதிசெய்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, தனிமைப்படுத்தல் காலக்கட்டத்தை குறைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
“இரண்டு வாரங்கள் வரை, ஹோட்டல் அறைகளில் வீரர்கள் வெறுமனே செலவிடுவதை விரும்பவில்லை” என்றுள்ளார் அவர். வழக்கமான கொரோனா தனிமைப்படுத்தல் காலக்கட்டம் 2 வாரங்களாகும்.
கொரோனா பரவல், கிரிக்கெட்டின் விதிமுறைகளை மாற்றிவிட்டது. இதன்படி, போட்டி துவங்குவதற்கு முன்னதாக, வீரர்கள் மொத்தம் 2 வாரங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து, போட்டிக்கு முன்னதாக பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும். தற்போதைய இங்கிலாந்து – விண்டீஸ் டெஸ்ட் தொடர் அந்த விதிமுறைகளின் அடிப்படையில்தான் நடைபெற்று வருகிறது.
ஆனால், இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சில விதிமுறை தளர்வுகள் கிடைக்கும் என்று நம்புவதாக கங்குலி தெரிவித்துள்ளார். இத்தொடர், பகல்-இரவு போட்டியை உள்ளடக்கிய மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கியதாகும்.
இந்தாண்டின் இறுதியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.