விராத் கோலியின் கருத்திலிருந்து மாறுபடும் சவுரவ் கங்குலி!

மும்பை: புதிய இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு தருவது குறித்து கேப்டன் விராத் கோலியின் கருத்திலிருந்து மாறுபட்டு கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.

ஒரு புதிய வீரருக்கு தனது திறமையை நிரூபிக்க குறைந்தபட்சம் 5 போட்டிகள் தேவைப்படும் என்பது விராத் கோலியின் கருத்து. ஆனால், புதிய வீரர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் அவசியம் என்பது கங்குலியின் கருத்து.

அவர் கூறியுள்ளதாவது, “தற்போது தென்னாப்பிரிக்காவுடன் திட்டமிடப்பட்டுள்ள டி-20 போட்டித் தொடரை, உலகக்கோப்பை டி-20 தொடருக்கான முன்தயாரிப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இதன்மூலம் தயார்படுத்தல் முயற்சிகள் பாதிக்கும்.

இந்திய அணிக்கு தற்போதைக்கு தேவையான முக்கிய விஷயம் என்னவெனில், வரும் டி-20 உலகக்கோப்பையை முக்கியமானதாக கருதக்கூடாது. தற்போது நடந்துமுடிந்த உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக முன்தயாரிப்பு குறித்த பேச்சுகள் அதிகம் இருந்தன. ஆனால் சில நேரங்களில் இது அணிக்கு நல்லதல்ல.

முடிந்தளவிற்கு சிறப்பான வீரர்களை அணியில் தேர்வுசெய்து, அவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்குவதாகும். உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான திறன்கொண்ட வீரர்கள் உள்ளனர். அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்ட இளம் வீரர்களே இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வார்கள்” என்றார் அவர்.