கொல்கத்தா: மகேந்திரசிங் தோனியின் திறமை குறித்து தொடக்க காலத்திலேயே சரியாக கணித்தவர் செளரவ் கங்குலி என்றுள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜாய் பட்டாச்சார்யா.
அவர் கூறியுள்ளதாவது, “2004ம் ஆண்டு வங்கதேச விமானத்தில் நான், கங்குலியுடன் பயணம் செய்தபோது, என்னிடம் கங்குலி, “இப்போது ஒரு புதிய அதிரடி பேட்ஸ்மேன் நம்முடன் இருக்கிறார். அவர் ஆட்டத்தை நீங்கள் பார்க்க வேண்டும். எம்.எஸ்.தோனி ஒரு ஸ்டாராக உருவெடுப்பார்” என்று என்னிடம் கூறினார் என்றார்.
மூன்றாம் நிலையில் கங்குலி தனக்குப் பதிலாக தோனியை அனுப்பியபோது, 2005ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 123 பந்துகளில் 148 ரன்கள் விளாசினார் அவர். இதே 3ம் நிலையில் இறங்கிய போதுதான், தோனி, தன் அதிகபட்ச ஒருநாள் எண்ணிக்கையான 183 ரன்களையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது கேப்டன்சி காலத்தில், பல இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி, அவர்களை மிகுந்த பொறுமையுடன் வார்த்தெடுத்து, இந்திய அணியை சிறப்பாக கட்டமைத்தவர் கங்குலி என்பது இன்றைய நிலையில் பெரியளவில் பேசப்படுகிறது.