நான் முதல்வர் ஆனால்..: அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்த கஞ்சா கருப்பு சொன்னது என்ன தெரியுமா?

ல்லாருக்கும் வணக்கம் வச்சுக்கிறேன். இன்னிக்கு ராத்திரிக்கு நெட்டிசன்களுக்கு ஒரு அருமையான மேட்டர் கிடைச்சிருக்கு.

பிரபல நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, அ.தி.மு.க.வுல சேர்ந்திருக்காரு.

“அப்போ வர்ற தேர்தல்ல எல்லா தொகுதியிலயும் அ.தி.மு.க.தான் ஜெயிக்கும்..” “ அ.தி.மு.கவுக்கு முதல்வர் வேட்பாளர் கிடைச்சுட்டாரு..” “ரஜினிக்கு பதிலா கஞ்சா கருப்பை அ.தி.மு.க. தலைவராக்க பாஜக முடிவு செஞ்சிருச்சு..” அப்படின்னெல்லாம் ஆளாளுக்கு பதிவு போட்டு தெறிக்கவிடப்போறாங்க.

கருப்பு ராஜாங்கிறது இவரோட இயற்பெயராம். முதல் படத்துல கஞ்சா விக்கிற கேரக்டர்ல நடிச்சதால அதுவும் பேருக்கு முன்னால ஒட்டிக்கிச்சாம். கூகுள் சொல்லுது.

சென்னை பசுமைவழிச்சாலையில இருக்கிற  முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குப்போயி அவரு முன்னால அ.தி.மு.க.வுல சேர்ந்திருக்காரு கஞ்சா.

இதில ஒரு விசயம் என்னன்னா.. ஏற்கெனவே ஒரு முறை இதே கஞ்சா கருப்பு, அ.தி.மு.க.வுல சேர்ந்தாரு.

2016ம் வருசம் செப்டம்பர் 15ம் தேதிதான் அந்த வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வு நடந்துச்சு. அப்போதைய முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையிலதான் இந்த இணைப்பு நடந்துச்சு.

அன்னைக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில அ.தி.மு.க. முப்பெரும் விழாவை பிரம்மாண்டமா நடத்துச்சு. அப்போ கஞ்சா கருப்பு மட்டுமில்ல.. 91,308 பேரு ஜெயலலிதா முன்னிலையில அந்தக் கட்சியில தங்களை இணைச்சுக்கிட்டாங்க.

கஞ்சா கருப்புக்கு அரசியல் புதுசில்லை. 2016ம் வருசம் நடந்த சட்டமன்றத் தேர்தல்ல திருச்செங்கோடு தொகுதியில சுயேட்சையா போட்டியிட்ட முத்துமணிக்கு ஆதரவா பிரச்சாரம் செஞ்சாரு.

(ம.தி.மு.க.காரரான முத்துமணிக்கு அந்த கட்சியில போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால சுயேட்சையா போட்டியிட்டாருங்கிறது கூடுதல் தகவல்!)

அப்போ பத்திரிகைக்காரங்களுக்கு பேட்டி கொடுத்த கஞ்சா என்ன சொன்னாரு தெரியுமா?

“நான் முதல்வர் ஆகிட்டா, பள்ளிக்கூட மாணவர்களுக்கு  மதிய உணவோட சேர்த்து  முழு கோழியும் போடுவேன்னு” அதிரடியா அறிவிச்சாரு.

ஆக, அ.தி.மு.க.வுக்கு முதல்வர் வேட்பாளரு ரெடி!