“பொய் மூட்டைகளை கொட்டிய அமீத்ஷா” மம்தா பானர்ஜி கடும் தாக்கு

கொல்கத்தா :

மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பா.ஜ.க.வை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

தனது பிரச்சாரத்தின் போது அவர், மம்தா பானர்ஜியின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

“மே.வங்க மாநிலம் ஊழல் மற்றும் ஆள் கடத்தலை தவிர மற்ற அனைத்து துறைகளிலும் பின் தங்கி உள்ளது” என அமீத்ஷா குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி “பா.ஜ.க.வினர் தெரிவித்த கருத்துக்களை, உண்மையா என அறியாமல் அமீத்ஷா பேசி இருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமானது அல்ல” என தெரிவித்தார்.

“மே.வங்க அரசு குறித்து அமீத்ஷா குறிப்பிட்ட கருத்துகள் பொய்களின் மூட்டை” என்று மம்தா பானர்ஜி காட்டமாக தெரிவித்தார்.

– பா. பாரதி