கேப்டவுன்: இந்திய அணிக்கான பயிற்சியாளர் பொறுப்ப‍ை ஏற்றதானது, திட்டமிடப்படாத ஒன்று என்றும், வெறும் 7 நிமிடங்களில் அனைத்தும் முடிந்ததாகவும் தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் முன்னாள் பயிற்சியாளரும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவருமான கேரி கிறிஸ்டன்.

அவர் கூறியுள்ளதாவது; இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை, நான் அந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கவும் இல்லை. கவாஸ்கரிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. முதலில் அதைப் பார்த்தவுடன் அது போலியானது என்று நினைத்து பதில் அளிக்கவில்லை.

ஆனால், மறுபடியும் எனக்கு ஒரு மின்னஞ்சல் அவரிடமிருந்தே வந்தது. அதில் நீங்கள் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க விரும்புகிறீர்களா? நேர்காணலுக்கு வருகிறீரக்ளா? என்று வினவியிருந்தார். எனக்கு வியப்பாக இருந்தது.

பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் குழுவில் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள். அனைவரும் அழைத்தபின் போவோமே என்று இந்தியாவுக்குச் சென்றேன். அப்போது இந்திய அணிக்கு கேப்டனாக அனில் கும்ப்ளே இருந்திருந்தார். நான் நேர்முகத் தேர்வுக்கு சென்றபோது, கும்ப்ளே என்னைப் பார்த்து பலமாகச் சிரித்தார்.

நேர்காணலில் நான் அமர்ந்தபோது, ரவி சாஸ்திரி மற்றும் கவாஸ்கரிடம் எனக்கு பயிற்சியாளர் அனுபவம் கிடையாது, இதுவரை எந்த அணிக்கும் பயிற்சியளிக்கவில்லை. நீங்கள் அழைத்தீர்கள் என்பதால் வந்தேன். நேர்காணலுக்கு கூட தயாராகவில்லை என்று தெளிவாகத் தெரிவித்தேன்.

ரவி சாஸ்திரி என்னைப் பார்த்து, “கேரி, தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சென்றால், வெல்வதற்கான திட்டம் என்ன வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். நான் 3 நிமிடங்கள் ஏதும் பேசவில்லை. அதேசமயம், அந்த நேரத்தில், அந்த நாளில் எது தேவையோ, அதை சரியாக செய்வேன் என்றேன்.

நான் கூறிய பதில் அவர்களுக்கு திருப்திகரமாக இருந்திருந்து. அடுத்த 4 நிமிடங்களில் எனக்கான நேர்காணல் முடிந்துவிட்டது. நான் எழுந்து புறப்பட்டபோது, தேர்வாளர்கள் என்னிடம் பயிற்சியாளர் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை அளித்தார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

நான் ஒப்பந்தத்தை வாங்கியதும் என்னுடைய பெயரைப் பார்த்தேன். அதில் கிரேக் சேப்பல் பெயர் இருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நீங்கள் முந்தைய ஆண்டு ஒப்பந்த ஆவணத்தை அளித்துவி்ட்டீர்கள் என நினைக்கிறேன். ஒப்பந்தத்தில் என்னுடைய பெயர் இல்லை என்று தேர்வாளர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் அதை வாங்கி, பேனாவால் சேப்பல் பெயரை அடித்துவிட்டு என்னுடைய பெயரை எழுதினார்கள். எல்லாமே 7 நிமிடத்தில் முடிந்துவிட்டது” என்று சுவைபட தெரிவித்தார் கேரி கிறிஸ்டன்.

இந்திய அணியின் பயிற்சியாளர்களில் இவர் வெற்றிகரமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.