’ஹிட் லிஸ்டில்’ இரண்டாவதாக இருந்த கௌரி லங்கேஷ்  : சிறப்பு விசாரணைக் குழு

பெங்களூரு

பெங்களூருவில் கைப்பற்றப்பட்ட டைரியில் கொல்லப்பட வேண்டியவர்களின் பெயரில் கௌரி லங்கேஷின் பெயர் இரண்டாவதாக உள்ளதாக சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் அவருடைய வீட்டு வாசலில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.  அவருடைய கொலையை விசாரித்து வரும் கர்நாடகா காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழு கைது செய்துள்ளவர்களில் ஒருவரான அமோல் காலே என்பவரிடம் இருந்து ஒரு டைரியை கைப்பற்றி உள்ளது.

அமோல் காலே புனேவை சேர்ந்தவர்.  இவர் இந்து ஜனஜாக்ருதி சமிதி என்னும் இந்து மத அமைப்பை சேர்ந்தவர்.   சிறப்பு விசாரணைக் குழு தற்போது அமோல் காலேவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரி குறித்து தெரிவித்துள்ளது.  குழு, “இந்து மத அமைப்பான ஜனஜாக்ருதி சமிதியின் தலைவர்கள் பரிந்துரைத்த நபர்களின் பெயர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியலில்  உள்ளது.

அதில் காணப்பட்ட வரிசைப்படி கொலைகள் நடத்தப்படவில்லை.  கௌரி லங்கேஷின் பெயர் இரண்டாவதாக உள்ளது.  ஆனால் அவர் முதலில் கொல்லப்பட்டுள்ளார்.   அத்துடன் இந்த பட்டியலில் மைசூரை சேர்ந்த எழுத்தாளர் கே எஸ் பகவான், கன்னட எழுத்தாளர்கள் யோகேஷ் மாஸ்டர், சந்திரசேகர் பாடில், உள்ளிட்ட பலர் உள்ளனர்.

இவர்களில் பிரபல நாடக ஆசிரியரும் நடிகருமான கிரிஷ் கர்னாட் ஒருவர் ஆவார்.  இவர்களைத் தவிர பல ஐ ஏ எஸ் அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.    அமோல் காலேவிடம் இருந்து கிடைத்த தகவலின்படி  இந்த பட்டியலில் உள்ளவர்களைக் கொல்ல 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.   மேலும் விசாரணை தொடர்ந்து வருகிறது” என தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி