கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகல் – கெளதம் கம்பீர் அதிருப்தி

புதுடெல்லி: கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் பாதியிலேயே விலகியது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் கெளதம் கம்பீர்.

கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக், திடீரென பாதியிலேயே கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி, இங்கிலாந்தின் இயான் மோர்கனிடம் பொறுப்பை ஒப்படைத்தார். கடந்த 2019ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையில் விமர்சனத்திற்குரிய முறையில் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தவர் இந்த மோர்கன்.

இந்நிலையில் இதுகுறித்து கெளதம் கம்பீர் கூறியிருப்பதாவது, “கேப்டனை இடையில் மாற்றியது தவறு. கொல்கத்தா அணி அப்படியொன்றும் மோசமாக செயல்பட்டு விடவில்லை. இதை துவக்கத்திலேயே செய்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.

கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் இடையே நல்ல புரிதல் அவசியம். இயான் மோர்கனால் பெரியளவில் மாற்றம் கொண்டுவர முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

கடந்த 2.5 ஆண்டுகளாக கேப்டனாக இருக்கிறார் தினேஷ் கார்த்திக். உலகக்கோப்பை வென்ற கேப்டன் என்ற அந்தஸ்துடன் இயான் மோர்கன் அணியில் இருப்பதால், அவரைப் பற்றிய பேச்சு, தினேஷ் கார்த்திக்கிற்கு நெருக்கடியை அளித்திருக்கலாம் மற்றும் அணி நிர்வாகத்தின் மனநிலையும் அவருக்கு தெரிந்திருக்கும்” என்றுள்ளாம் கம்பீர்.