புதுடெல்லி: இந்திய தலைநகரில் ஊரடங்கு தொடர்பான பல தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளதை ஒட்டி, தனது அதிருப்தியையும் எச்சரிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார் கிழக்கு டெல்லி மக்களவை உறுப்பினர் கெளதம் கம்பீர்.
“ஒரு தவறான முடிவால் எல்லாமே முடிந்துவிடும்” என்றுள்ளார் அவர்.
இந்தியா முழுவதும் மே 18ம் தேதி முதல் 4ம் கட்ட ஊரடங்கு அமலானது. இதில், மத்திய அரசு சார்பில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. இதனோடு சேர்த்து, மாநில அரசுகளும், தங்கள் மாநிலத்தில் இருக்கும் பாதிப்பிற்கு ஏற்ற வகையில் மேலும் சில தளர்வுகளை அமல்படுத்தின.
தலைநகரில், இதுவரை 10000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 168 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு ஆட்டோ, சைக்கிள் ரிக்சா, வாடகை கார்கள், பேருந்துகள் இயங்கலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி, நகரம் முழுவதும் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி, பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை கிழக்கு டெல்லி பாரதீய ஜனதா மக்களவை உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர் விமர்சித்துள்ளார். அவர் டிவிட்டரில் கூறியுள்ளதாவது, “ஊரடங்கில் பெரும்பாலான செயல்பாடுகளுக்கு தளர்வு அளிப்பது டெல்லிவாசிகளைப் பொறுத்தவரை மரண உத்தரவாதத்தை அளிப்பது போன்றது. இதுகுறித்து டெல்லி அரசு மீண்டும் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஒரு தவறான முடிவால் எல்லாமே முடிந்துவிடும்” என்றுள்ளார்.