டில்லி

குருகிராமில் இந்துத்வா தொண்டர்கள் ஒரு இஸ்லாமிய இளைஞர் குல்லாவை அகற்றியதற்கு கவுதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் நகரில் உள்ள ஜேக்கப் புரா பகுதியில் முகமது பர்கர் ஆலம் என்னும் 25 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் இங்கு தையல்கடை நடத்தி வருகிறார். சென்றவாரம் சனிக்கிழமை இரவு நேரத்தில் இவர் கடைக்கு அடையாளம் தெரியாத நால்வர் வந்து அவருடைய குல்லாவை கழற்ற சொல்லி உள்ளனர்.

அவர் மறுத்ததால் வலுக்கட்டாயமாக குல்லாவை கழற்றி பாரத் மாதா கி ஜே எனவும் ஜெய் ஸ்ரீராம் எனவும் கோஷமிட சொல்லி உள்ளனர். ஆலம் மறுக்கவே அவரை அடித்து உதைத்துள்ள்னர். அவர் சத்தம் எழுப்பியதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

இது குறித்து ஆலம் குருகிராம் காவல்துறையிடம்புகார் அளித்துள்ளார். குருகிராம் காவல் துணை ஆணயர் ராஜிவ் குமார், “ஆலம் அளித்த புகாரைப் பெற்றுள்ளோம். முதல்தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு, ஐபிசி பிரிவு 153, 147, 149, 323,506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம், விரைவில் அந்த நபர்களை கைது செய்வோம்” என கூறி உள்ளார்.

கிழக்கு டில்லி தொகுதி பாஜக பாராளுமன்ற உறுப்பினரான கவுதம் கம்பீர் தனது டிவிட்டரில் கண்டனம் தெர்வித்து, “குருகிராமில் முஸ்லிம் இளைஞர் தலையில் அணிந்திருந்த குல்லாவை நீக்கக் கோரியும், ஜெய் ஸ்ரீராம் என உச்சரிக்கச் சொல்லியும் சிலர் நடத்திய தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்களை செய்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க குருகிராம் அதிகாரிகள் முன்வர வேண்டும். நாம் மதச்சார்பற்ற நாட்டில் வசிக்கிறோம் ” என பதிந்துள்ளார்.