கவுகாத்தி:

வெளிநாட்டவர் என தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி முகமது சனவுல்லாவை கவுகாத்தி உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.


கடந்த 1987-2017 வரை இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் முகமது சனவுல்லா. கார்கில் போரிலும் பங்கேற்றிருக்கிறார். குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட பிறகு, ராணுவ அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

2014-ம் ஆண்டு கவுரவ கேப்டனாக இருந்து இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார்.
ஓய்வுக்குப் பிறகு அசாம் போலீஸில் சப் இன்ஸ்பெக்டராக சேர்ந்தார்.

அதன்பின்னர் அசாம் போலீஸின் எல்லை பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றினார்.

அப்போது, முகமது சனவுல்லா சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியதாக அசாம் போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.

அசாமில் உள்ள வெளிநாட்டினர் தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரித்து, அவரை வெளிநாட்டவர் என்று அறிவித்தது. இதனையடுத்து, மே 28-ம் தேதி முகமது சனவுல்லா கைது செய்யப்பட்டு முகாமில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் முகமது சனவுல்லா மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை ரூ.20 ஆயிரம் சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கான இரு நபர் ஜாமீன் பேரில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.

போலீஸ் சூப்பிரண்டன்ட் அனுமதியின்றி காம்ரூப் மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று முகமது சனவுல்லாவுக்கு நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர்.