மும்பை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து சுனில் கவாஸ்கர் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

அஸ்வின் பங்குபெறாமல் போகும் தொடர்ச்சியான நான்காவது டெஸ்ட் இதுவாகும். ஆஸ்திரேலிய தொடரில் நடந்த கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் காயம் காரணமாக இவர் ஆடவில்லை. ஆனால், முதல் டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்வதற்கு முழு உடல் தகுதியுடன் அவர் இருந்தாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் அஸ்வினுக்கான வாய்ப்பில் குறுக்கே நிற்பவர்கள் என்று கருதப்படுகிறார்கள். தற்போதைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுழற்பந்து வீச்சுக்கு ஜடேஜாவை மட்டுமே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தான் ஆடிய 11 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். மேலும் 4 சதங்களையும் விளாசியுள்ளார். இதன் சராசரி 50க்கும் மேல்.

தற்போதைய நிலையில், மொத்தம் 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 342 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதோடு, 2361 ரன்களையும் குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 250 மற்றும் 300 விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றிய பந்துவீச்சாளர் எந்த சாதனையையும் தன்னகத்தே வைத்துள்ளார் அஸ்வின்.

எனவே, இவ்வளவு சிறப்புவாய்ந்த அஸ்வின் எதற்காக மேற்கிந்திய தீவுகள் தொடரில் கழற்றிவிடப்பட்டார் என்பதே கவாஸ்கரின் கேள்வியாக உள்ளது.