லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அணிகள் விளையாடும் கால அட்டவணையின் தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் இந்தியாவின் முன்னாள் வீரர் கவாஸ்கர்.

அவர் கூறியுள்ளதாவது, “வங்கதேசத்துடன் நடந்த தனது பயிற்சி ஆட்டத்திற்கு பிறகு, முழுமையாக ஒருவாரம் ஓய்விலிருக்கும் இந்திய அணி, ஜுன் 5ம் தேதி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இவ்வளவு இடைவெளி தேவையா? என்பதும் யோசிக்கப்பட வேண்டும்.

இந்தியாவிற்கு இது முதல் ஆட்டம். தென்னாப்பிரிக்காவிற்கோ இது மூன்றாவது ஆட்டம். ஏறகனவே தான் ஆடிய 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள தென்னாப்பிரிக்கா, இன்று வலிமையான இந்திய அணியை சந்திக்கிறது. இப்படியான தொடர் போட்டிகள் அந்த அணியை உளவியல் ரீதியாக பாதிக்கலாம்.

மேலும், அடுத்து வரும் நாட்களில், இந்திய அணிக்கு நெருக்கமான ஆட்டங்கள் காத்துக்கொண்டுள்ளன. இடையில் 2 நாட்கள்கூட ஓய்வில்லாமல் அட்டவணை போடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா தனது முதல் ஆட்டத்தை ஆடத் தொடங்குவதற்கு முன்னதாகவே, மற்ற அணிகள் கிட்டத்தட்ட 2 ஆட்டங்களை ஆடி முடித்துவிட்டன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் உள்ளார்ந்த சச்சரவுகள், இத்தகைய அட்டவணையை, நடைமுறைக்கு வரும் முன்னதாகவே சரிபார்க்க அனுமதிக்கவில்லை.

அட்டவணைகளில் இப்படியாக குளறுபடிகள் இருந்தாலும், ஒரு அணி வெற்றிபெற்றுவிட்டால் இதெல்லாம் பிரச்சினையாகாது. ஆனால், அணி தோல்வியடையும்போதுதான் இத்தகைய பிரச்சினைகள் பூதாகரமாகும்” என்றார்.