பவுன்சர் விஷயத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை வாரும் கவாஸ்கர்!

மும்பை: ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்த‍ை, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிரமப்படுத்துவர் என்றுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்.

ஆஸ்திரேலியாவில் நீண்ட சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கிறது.

இந்நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் தனக்கெதிராக பவுன்சர் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தினால், அதை சந்திக்க தயாராக உள்ளேன் என்று கூறியிருந்தார் அந்தவகைப் பந்துகளை சந்திக்க பொதுவாக சிரமப்படும் ஸ்டீவ் ஸ்மித்.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், “எந்த பேட்ஸ்மேனும் பவுன்சர் பந்துகளை சந்திக்க ஆவலாக இருக்கமாட்டார். ஏனெனில், துல்லியமான பவுன்சர்கள் எந்தவித பேட்ஸ்மென்களையும் நிலைகுலையச் செய்துவிடும்.

இந்திய வீரர் ஷமியின் பவுன்சர் பிரமாதமாக இருக்கும். பேட்ஸ்மேனின் தோள்பட்டை மற்றும் தலைப் பகுதியை குறிவைத்து இவர் வீசும் பவுன்சர், நிலைகுலைய வைத்துவிடும்” என்றுள்ளார் கவாஸ்கர்.