கபில்தேவ் தொடர்பான அந்த விஷயம் குறித்து மனந்திறந்த கவாஸ்கர்!

--

மும்பை: தனக்கும், இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய கபில்தேவுக்கும் இடையில் பிரச்சினை இருப்பதாக கூறி ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு விஷயம் குறித்து மனந்திறந்து பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

கடந்த 1984-85ம் ஆண்டு காலகட்டத்தில், இங்கிலாந்திற்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் கபில்தேவ் அணியில் இடம்பெறவில்லை. கபில்தேவ் அப்போட்டியிலிருந்து நீக்கப்பட்டதற்கு அப்போது டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த கவாஸ்கரே காரணம் என்று பல பத்திரிகைகள் வரிசைகட்டி செய்தி வெளியிட்டன.

ஆனால், அணியின் ஒரு சிறந்த ஆல்ரவுண்டரை, ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு வீரரை கழற்றிவிடும் ஒரு முடிவை நிச்சயம் தான் எடுக்கவில்லை என்று விளக்கியுள்ளார் கவாஸ்கர்.

இந்த இரண்டு வீரர்களும்தான், நிச்சயத்தன்மையற்று தவித்த இந்திய அணிக்கு ஒரு நிச்சயத்தன்மையை அளித்தவர்கள். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில், தங்களின் தனிப்பட்ட திறமை மற்றும் மதிநுட்பத்தால் அணியின் பல வெற்றிகளுக்கு மூலமாக செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கவாஸ்கர் பேட்டிங்கிலும், கபில்தேவ் பந்துவீச்சிலும் உலக சாதனையை செய்தவர்கள். பின்னர், அவர்களின் சாதனை முறியடிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.