அபுதாபி: ஐபிஎல் போட்டிகளில் தற்போது நிலவும் பேட்ஸ்மென்களின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்கு, பந்துவீச்சாளர்களுக்கு ஓவருக்கு 2 பவுன்சர்கள் மற்றும் கூடுதலாக 1 ஓவர் போன்ற புதிய விதிமுறைகளை உருவாக்கலாம் என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர்.
அவர் கூறியுள்ளதாவது, “டி-20 போட்டிகளைப் பொறுத்தவரை பேட்ஸ்மென்களின் ஆதிக்கம் அதிகம் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதில் பந்துவீச்சாளர்களுக்கு சற்று சாதகமான அம்சங்களையும் கொண்டு வரலாம்.
அதன்படி, தற்போது ஓவருக்கு 1 பவுன்சர் என்பதை 2 பவுன்சர்களாக அதிகரிக்கலாம். மேலும், மூன்றாவது ஓவரில் பவுலர் விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில், கூடுதலாக 1 ஓவர் வீச(4 என்பதற்கு பதில் 5) அவருக்கு அனுமதி வழங்கலாம்.
மேலும், பவுண்டரி எல்லையின் அளவை அதிகரிக்கலாம். பந்துவீசுவதற்கு முன்பாக, பேட்ஸ்மென் கிரீசை விட்டு எவ்வளவு தூரம் விலகி நிற்கிறார் என்பதை மூன்றாவது நடுவர் மூலம் அறிந்து, எடுக்கும் ரன்களில் ஒன்றை குறைக்கலாம்.
மற்றபடி, வேறு எந்த புதிய விதிமுறைகளும் தேவையில்லை என்பது என் கருத்து” என்றுள்ளார் கவாஸ்கர்.