ஜெருசலேம்:

காசா எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 500 ராக்கெட்களை வீசி சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடிக்கு 5 பேர் உயிரிழந்தனர்.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான காசா முனையில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது இங்குள்ள ஹமாஸ் போராளிகள் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக காசா நகரின்மீது இஸ்ரேல் நாட்டு போர் விமானங்களும் குண்டுமழை பொழிவதுண்டு.

இந்நிலையில், காசா முனையில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது நேற்று ஹமாஸ் போராளிகள் சுமார் 500 ராக்கெட்டுகளை ஏவி மிகப்பெரிய தாக்குதல் நடத்தியதாகவும், அவற்றில் பலவற்றை தங்களது ஏவுகணைகள் இடைமறித்து அழித்ததாகவும் இஸ்ரேல் அரசு தெரிவித்திருந்தது.

இந்த தாக்குதலில் இஸ்ரேலில் சில வீடுகள் சேதமடைந்ததாகவும் ஓரிருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் இன்று நடத்திய எதிர் தாக்குதலில் ஒரு கர்ப்பிணி, 13 மாத கைக்குழந்தை உள்பட பாலஸ்தீனத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த உச்சகட்ட மோதலில் 270-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.