டில்லி

ஜிஎஸ்டி வரி விதிப்பினால் ரூ 34000 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என அரசு சந்தேகம் கொண்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் நமது நாட்டில் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமுலாக்கபட்டது.   அப்போது ஜிஎஸ்டிஆர் 1 என்னும் படிவத்தின் மூலம் அனைத்து வர்த்தகர்களும் தங்களிடம் உள்ள வரி பாக்கிகளை தெரிவித்திருந்தனர்.   பிறகு படிவங்கள் மாற்றப்பட்டு தற்போது ஜிஎஸ்டிஆர் 3 படிவம் உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது.

கடந்த சனிக்கிழமை அன்று நடந்த ஜி எஸ் டி கவுன்சில் கலந்தாய்வில் இந்த படிவங்கள் ஆராயப்பட்டன.  அப்போது முதலில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்துக்கும் இறுதிப் படிவத்துக்கும் இடையில் பல மாறுபாடுகள் உள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.   அதாவது இரு படிவங்களுக்கும் இடையில் காட்டப்பட்டுள்ள வரி பாக்கிக்கும் இடையில் வரிபாக்கி ரூ.34000 கோடி குறைவாகக் காணப்படுகிறது.

இதனால் ரூ.34000 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என அரசு சந்தேகத்தில் உள்ளது.  இது குறித்துஆராய்ந்து வருகிறது.   அத்துடன் வர்த்தகர்கள்  சுங்க அதிகாரிகளிடம் தாங்கள் வாங்கிய பொருளின் மதிப்பை குறைத்து காட்டி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.   உதாரணமாக ரூ.10000 க்கு வாங்கப்பட்ட மொபைலின் மதிப்பு வரி விதிப்புக்காக ரூ.7000 என காட்டப்படுகிறது.   அதன் மூலம் ஒவ்வொரு இடத்திலும் ஜிஎஸ் டி மதிப்பு குறைத்து செலுத்தப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது.

இது குறித்து வரி கணக்காளர்கள், “உள் புகும் வரிகளுக்கும், செலுத்தும் வரிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஒவ்வொரு பொருளுக்கும் மாறுபடும்.   உள் புகும் வரியை சில மாதங்களுக்கு உபயோகப்படுத்தப் படாவிடில் அவைகள் அதிகரித்து விடும்.  உபயோகப்படுத்தும் சமயத்தில் வரி வித்தியாசம் மிகவும் குறையும்.   அதனால் வரி பாக்கி அந்த மாதங்களில் குறைவாக இருக்கும்” என விளக்கம் கூறி உள்ளனர்.